ராஜாதோப்பு அணையில் தவறி விழுந்தவர் உடல் 2 நாட்களாகியும் கிடைக்கவில்லை
தவறி விழுந்தவர் உடல் 2 நாட்களாகியும் கிடைக்கவில்லை
காட்பாடி
கே.வி.குப்பம் தாலுகாவில் ராஜா தோப்பு அணை உள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நண்பர்கள் 3 பேர் அங்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த அணையில் ஒருவர் தவறி விழுந்து விட்டார். இதனால் பதறிப்போன மற்ற 2 பேர் இதுகுறித்து காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து அணையில் குதித்து இறந்தவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மாலை 6.30 மணிக்கு இருட்டாகி விட்டதால் உடலை தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக உடலை தேடும் பணி நடந்தது. தீயணைப்பு துறை அலுவலர் பால்பாண்டி தலைமையில் கே.வி.குப்பம் துணை தாசில்தார் பலராமன், லத்தேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் அணையில் குதித்து உடலை தேடினர். நேற்று முழுவதும் தேடியும் உடல் கிடைக்கவில்லை.
இதனால் நேற்று மாலை 6.30 மணியுடன் உடலை தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்தினர். இன்று 3-வது நாளாக உடலை தேடும் பணி நடைபெறும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.