ராணிப்பேட்டையில் கலெக்டர் நிதியில் 11 பெண்களுக்கு தையல் எந்திரம்
ராணிப்பேட்டையில் மாவட்ட கலெக்டர் நிதியில் 11 பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டன.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் மாவட்ட கலெக்டர் நிதியில் 11 பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டன.
325 மனுக்கள் பெறப்பட்டன
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டிய மனுக்கள் மற்றும் பொது நலன் குறித்த மனுக்கள் என 325 மனுக்கள் பெறப்பட்டன.
பின்னர் அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
சுயத்தொழில் செய்திட..
கூட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் சமூக நலத்துறையின் சார்பில் தையல் எந்திரங்கள் வேண்டி பெண்கள் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து, மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து தலா ரூ.5,500 வீதம் 11 பெண்களுக்கு ரூ.60 ஆயிரத்து 500 மதிப்புள்ள தையல் எந்திரங்களை அவர்களின் வாழ்வாதாரத்துக்கான சுயத்தொழில் செய்திட மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, துணை ஆட்சியர்கள் தாரகேஸ்வரி, இளவரசி, மணிமேகலை, மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமார் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.