பயிர் இன்சூரன்ஸ் தொகை அறிவிக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம்

திருவாடானை தாலுகாவில் பயிர் இன்சூரன்ஸ் தொகை அறிவிக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2021-10-25 17:07 GMT
தொண்டி, 
திருவாடானை தாலுகாவில் பயிர் இன்சூரன்ஸ் தொகை அறிவிக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பாதிப்பு
திருவாடானை தாலுகாவில் கடந்த ஆண்டு சுமார் 26 ஆயிரத்து 715 எக்டேரில் நெற் பயிர் சாகுபடி நடைபெற்றது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கடுமையான மழையினால் இந்த தாலுகாவில் நெற்பயிர் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 
திருவாடானை தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் விளைந்த நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் நீரில் மூழ்கி வீணாகியது. அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறையினர் மூலம் பாதிப்புகளை ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கியது.
பயிர் காப்பீடு
ஆனால் விவசாயிகளின் பாதிப்பு பெரிய அளவில் இருந்தது. இதனால் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்போது திருவா டானை தாலுகா விவசாயிகளுக்கு கடந்த 2020-21- ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை அறிவிக்கப்படவில்லை. இதனால் இந்த தாலுகா விவசாயிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகி கவலையில் ஆழ்ந்துள்ளனர். 
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு கூறியதாவது:- கடந்த ஆண்டு விவசாயிகள் முழுச்செலவும் செய்து நெற் பயிர் நல்ல விளைச்சல் ஏற்பட்ட நிலையில் கன மழையின் காரணமாக விளைவித்த நெல்லை வீடு கொண்டு வர முடியவில்லை. ஆனால் அதிகாரிகள் சராசரி மதிப்பீடு அடிப்படையில் பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்க மறுத்துள்ளனர்.
இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. முழுமை யான விளைச்சல் கிடைத்தும் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் நாசமானது. விவசாயிகளுக்கு கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு அறிவிக்கப்படாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. 
நடவடிக்கை
விவசாயிகள் தங்களது வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்தும் வட்டிக்கு கடன் வாங்கியும்  சாகுபடி செய்து இருந்தனர்.இதனால் செய்வதறியாது பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பயிர் காப்பீடு குறித்து மாவட்ட கலெக் டரிடம் பேசியதற்கு அரசு அதிகாரிகள் பயிர் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறி உள்ளார்.அது எந்தவிதத்திலும் பலன் அளிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே தமிழக அரசும் பயிர் இன்சூரன்ஸ் கம்பெனியும் மறு ஆய்வு செய்து கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டிற்க்கு உரிய இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்