கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைப்பாதையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானல்-பெரியகுளம் செல்லும் சாலையில் அடுக்கம் கிராமத்தின் அருகே நேற்று முன்தினம் அதிகாலை திடீரென 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலை துண்டிக்கப்பட்டது. மேலும் கிராம மக்கள் சாலையை கடந்து வர முடியாத சூழ்நிலை நிலவியதுடன் போக்குவரத்து முடங்கியது. அதிகமான மழை நீர் சென்றதால் ஒரு சில இடங்களில் சிமெண்டு சாலையும் சேதமடைந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மண்சரிவு ஏற்பட்ட சாலையில் உருண்டு கிடந்த பாறைகள், மரம் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தி மணல் மூடைகளை அடுக்கி சாலையை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை முதல் அங்கு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றி சாய்ந்திருந்த மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சீரமைத்தனர். இதையடுத்து 30 மணி நேரத்திற்கு பிறகு அங்குள்ள மலைக்கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.