கார் திருடிய டிரைவர் கைது

தேவதானப்பட்டி அருகே காரை திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-25 16:47 GMT
தேனி : 

தேனி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 47). இவரது நண்பர் வீரபாண்டியை சேர்ந்த முருகேசன். இவர்கள் 2 பேரும் மகேந்திரனின் உறவினர் காரில் கடந்த 23-ந்தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை பூமலைக்குண்டுவை சேர்ந்த குரு பாலன் (40) என்பவர் ஓட்டினார்.


 வத்தலக்குண்டு-கொடைக்கானல் மெயின் ரோடு புஷ்பராணி நகர் அருகே வந்தபோது காரில் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக குரு பாலன் கூறினார். இதையடுத்து பெட்ரோல் வாங்கி வரும்படி மகேந்திரன், முருகேசனிடம் டிரைவர் கூறினார். 

உடனே அவர்கள் சென்று பெட்ரோல் வாங்கி வந்து பார்த்த போது அந்த இடத்தில் காரை காணவில்லை. கார் திருடுபோனது அவர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடிய குருபாலனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜி.கல்லுப்பட்டி அருகே அந்த கார் நின்று கொண்டிருந்தது. இதையறிந்த போலீசார் அங்கு சென்று காரை பறிமுதல் செய்து, குரு பாலனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்