ராஜவாய்க்காலை தூர்வாரக்கோரி கலெக்டரிடம் மனு
தேனியில் மழைநீர் வீடுகள் புகுவதை தடுக்க ராஜவாய்க்காலை தூர்வாரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தேனி:
தேனியில் மழைநீர் வீடுகள் புகுவதை தடுக்க ராஜவாய்க்காலை தூர்வாரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ராஜினாமா கடிதம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை வாங்கினார். மொத்தம் 240 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் நாகஜோதி, வீரலட்சுமி, செல்லப்பாண்டி, மதுமிதா, சுலைமான், சேகர் ஆகிய 6 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் 6 பேரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தை கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்தனர். அந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட கலெக்டர், ஊராட்சியில் உள்ள பிரச்சினைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ராஜினாமா செய்ய வேண்டாம் என்றும் கூறினார். அதனால் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மனு அளித்த வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், "எங்கள் ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகளில் முறைகேடுகள் நடக்கின்றன. நடக்காத பணிகளை நடந்ததாக கூறி முறைகேடுகள் நடந்துள்ளன. ஊராட்சி மன்ற கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவது இல்லை. தீர்மானங்களை முழுமையாக வாசிப்பது இல்லை. ஊராட்சி மன்றத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ராஜினாமா செய்ய முடிவு செய்து கலெக்டரிடம் கடிதம் கொடுத்தோம்" என்றனர்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "தேனி ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்த போது மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் மக்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கம்பம் நகர தலைவர் அக்கீம்ராஜா தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "கம்பம் பள்ளிவாசல் தெருவின் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாய்கள் மிகவும் சிதிலமடைந்து கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. மழை பெய்யும் நேரங்களில் மழைநீர் வீடுகளுக்குள் செல்லும் அவலம் உள்ளது. பல முறை மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, இருபுறமும் கான்கிரீட் தடுப்புகளை கட்டி தடையின்றி கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
அதுபோல், தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றி, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வளரும் தமிழகம் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.