பரமத்தி அருகே வாகனம் மோதி ரெயில்வே என்ஜினீயர் பலி நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்
பரமத்தி அருகே வாகனம் மோதி ரெயில்வே என்ஜினீயர் பலி நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்
பரமத்திவேலூர்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மயிலபுரத்தை சேர்ந்தவர் ஜோதிபாசு (வயது 43). இவர் சேலத்தில் உள்ள ெரயில்வே அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் ஜோதிபாசு தனது சொந்த ஊரான மயிலபுரத்திற்கு சென்று விட்டு சேலம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு கரூர்- நாமக்கல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பரமத்தி ஓவியம்பாளையம் அருகில் உள்ள திருமணிமுத்தாறு பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜோதிபாசு ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு ஜோதிபாசுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.