குற்ற சம்பவங்களை தடுக்க 250 நவீன கேமராக்கள்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

கொடைக்கானலில் குற்ற சம்பவங்களை தடுக்க 250 நவீன கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்தார்.

Update: 2021-10-25 16:11 GMT
கொடைக்கானல்:
தமிழ்நாடு காவல் வீட்டுவசதி சங்கத்தின் சார்பில் கொடைக்கானலில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, பூமிபூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் ெகாடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்டு, அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து வருகிற 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளநிலையில், அதற்கான செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
இந்த நிகழ்ச்சிகளில் ஆர்.டி.ஓ. முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சீனிவாசன், லட்சுமிபிரியா, இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், இளநிலை பொறியாளர் செல்லத்துரை, சுகாதார அலுவலர் (பொறுப்பு) சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர். 
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், கொடைக்கானலில் குற்ற சம்பவங்களை தவிர்க்க விரைவில் 250 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அனுமதியின்றி மசாஜ் சென்டர் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேல்மலை பகுதியில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு கொடைக்கானலுக்கு வரும் வழியில் குருசடி என்ற இடத்தின் அருகே மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்து கிடந்தது. இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக நின்றன. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டுடன் வந்த போலீசார் விரைந்து சென்று மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். 

மேலும் செய்திகள்