மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்; வேளாண் அதிகாரி ஆய்வு

கன்னவாடி பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2021-10-25 16:07 GMT
திண்டுக்கல்:
ரெட்டியார்சத்திரம் தாலுகா கன்னிவாடி, தருமத்துப்பட்டி, கோனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோள பயிர்சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னிவாடி, தருமத்துப்பட்டி, கோனூர் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் படைப்புழுக்களால் தாக்கப்பட்டன. இதனால் கவலையடைந்த விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர் உமாவிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து வேளாண்மை உதவி இயக்குனர் உமா அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் மக்காச்சோள பயிர்களில் படைப்புழுக்களால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தார். அப்போது பயிர்களில் படைப்புழுக்களால் குறைந்த அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து படைப்புழுக்கள் தாக்குதலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அவர் விளக்கமளித்தார். அதாவது, குளோர் ஆன்டரிநில்பரோல் அல்லது புளுபென்டமைடு உள்ளிட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை வேளாண் அதிகாரிகள் பரிந்துரை செய்யும் அளவில் தண்ணீருடன் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மக்காச்சோள பயிர்களில் தெளிக்க வேண்டும். பின்னர் 15 நாள் இடைவெளி விட்டு அசாடிராக்டின் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை அதிகாரிகள் பரிந்துரைப்படி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது 25 நாள் பயிர்களுக்கான தடுப்பு நடவடிக்கை ஆகும். 25 முதல் 45 நாள் வரையுள்ள பயிர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என்றார். ஆய்வின் போது, ரெட்டியார்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் ராமராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்