தகுதியற்ற நபர்களுக்கு உதவித்தொகை வழங்குவதை தடுக்க வேண்டும். கலெக்டர் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதியற்ற நபர்களுக்கு உதரித்தொகை வழங்குவதை தடுக்க வேண்டுமென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-10-25 15:51 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதியற்ற நபர்களுக்கு உதரித்தொகை வழங்குவதை தடுக்க வேண்டுமென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-

சுகாதார சீர்கேடு

கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அலுவலர்களால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் சாலை ஓரங்களிலும், நீர் நிலைகளிலும் வீசப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆகவே பிளாஸ்டிக் ஒழிப்பு பணிக்கு முக்கியத்துவம் வழங்கிட வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்திட மத்திய சுகாதார பணியாளர்கள் நாளை முதல் டெங்கு பாதித்த பகுதிக டெங்கு கொசு ஒழிப்பு பணியாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

முதியோர் உதவித்தொகை

மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் இணைந்து விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட வழங்கல் துறையின் மூலம் ரேஷன் அட்டை வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். 

மாவட்டம் முழுவதும் முதியோர் உதவித் தொகை சுமார் 97 ஆயிரம் நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகைகள் முறையான நபர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை வருவாய்த்துறையினர் கண்காணித்து, தகுதியற்ற நபர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை தடுக்க வேண்டும். 

சிறப்பு முகாம்

மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வருவதை தவிர்க்க 6 தாலுகாக்களிலும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்