சுல்தான்பேட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கரும்புலி காட்டைச்சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 23). இவர் தனது நண்பர்களான தஞ்சாவூரை சேர்ந்த பிரசாந்த் (19), பிரவீன்குமார் (24) ஆகியோருடன் சுல்தான்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு பொள்ளாச்சி- பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டம் அருகே 3 பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் முத்துகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் இறந்தவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.