நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் காட்டு யானைகள் முகாம்
நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் காட்டு யானைகள் முகாம்
வால்பாறை
வால்பாறை அருகே நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்து உள்ளார்கள்.
காட்டு யானைகள் முகாம்
வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு சுற்றித்திறிந்து வருகிறது. இந்த யானைகள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தொழிலாளர்கள் வீடுகள், ரேஷன் கடைகள், பள்ளி சத்துணவு கூடங்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் வால்பாறை அருகில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 4 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு வருகிறது. இந்த யானைகள் பூஞ்சோலை பகுதிக்கு செல்வதும் அருகில் உள்ள தேயிலை தோட்ட பகுதிக்கு வருவதுமாக இருந்து வருகிறது.
வனத்துறை தடை
இதனால் கடந்த 2 நாட்களாக நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். இதனால் வால்பாறை பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதிக்கு செல்லமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதை எஸ்டேட் நிர்வாகங்கள் தடைவிதித்து அருகில் உள்ள வேறு தோட்ட பகுதிக்கு தொழிலாளர்கள் மாற்றி விடப்பட்டனர்.
கண்காணிப்பு பணி
காட்டு யானைகள் முகாமிட்டிருந்த பகுதிக்கு அருகில் ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடை இருப்பதால் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் இந்த பகுதியில் பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.