விவசாயி வீட்டை இடித்த விநாயகன் யானை
முதுமலை எல்லையில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் விநாயகன் யானை, விவசாயி வீட்டை இடித்தது. அதனை உடனடியாக பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்
முதுமலை எல்லையில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் விநாயகன் யானை, விவசாயி வீட்டை இடித்தது. அதனை உடனடியாக பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
விநாயகன் யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர்-முதுமலை எல்லையோர கிராமங்களில் விநாயகன் என்ற காட்டுயானை புகுந்து வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அந்த யானையை பிடித்து முதுமலை முகாமில் பராமரிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் இதுவரை 100-க்கும் மேற்பட்ட வீடுகளை விநாயகன் யானை உடைத்து உள்ளது. இதனால் கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டை இடித்து அட்டகாசம்
இதற்கிடையில் முதுமலையில் இருந்து 6 கும்கி யானைகளை கொண்டு வந்து, விநாயகன் யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதை மீறி விநாயகன் யானை ஊருக்குள் வந்து வீடுகளை அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் முதுமலை ஊராட்சி நம்பிகுன்னு பகுதிக்கு வந்த விநாயகன் யானை, வேணு என்ற விவசாயி வீட்டை இடித்து அட்டகாசம் செய்தது. தொடர்ந்து அங்கு பயிரிட்டு இருந்த மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை மிதித்து நாசம் செய்தது.
இழப்பீடு வழங்குவது இல்லை
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
கோவையில் விநாயகன் யானையை பிடித்து முதுமலையில் விட்டபோது, ஊருக்குள் வராமல் தடுக்க தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அந்த யானை ஊருக்குள் வந்து வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தும் நிலையில், அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெயரளவுக்கு அடிமட்ட ஊழியர்களை மட்டுமே கண்காணிப்பு பணியில் உயர் அதிகாரிகள் ஈடுபடுத்தி வருகின்றனர். இரவு, பகலாக பணியாற்றுவதால் அவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். சேதம் அடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை கூட வழங்கவில்லை. எனவே விநாயகன் யானையை உடனடியாக பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.