தீபாவளி போனஸ், நிலுவை சம்பளம் வழங்குவதில் சிக்கல்
கோடநாடு, கார்சன் எஸ்டேட் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதால் தீபாவளி போனஸ், நிலுவை சம்பளம் வழங்குவதில் சிக்கல் எழுந்து உள்ளது. இதனால் தொழிலாளர்கள் தவிப்பில் உள்ளனர்.
கோத்தகிரி
கோடநாடு, கார்சன் எஸ்டேட் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதால் தீபாவளி போனஸ், நிலுவை சம்பளம் வழங்குவதில் சிக்கல் எழுந்து உள்ளது. இதனால் தொழிலாளர்கள் தவிப்பில் உள்ளனர்.
வரி ஏய்ப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த எஸ்டேட்டுகளில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது எஸ்டேட்டுகளின் அலுவலகங்களில் இருந்து பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அவற்றை ஆய்வு செய்ததில் வருமானத்தை குறைத்து காட்டியது, வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது.
வங்கி கணக்குகள் முடக்கம்
அதன் அடிப்படையில் கோத்தகிரியில் உள்ள ஈளாடாவில் செயல்படும் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மேற்கண்ட 2 எஸ்டேட்டுகளின் கணக்குகளை கடந்த 9-ந் தேதி வருமான வரித்துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது.
வரி பாக்கி நிலுவையில் இருப்பதாலும், வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சம்பளம் வழங்கவில்லை
இந்த நிலையில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதால் மேற்கண்ட எஸ்டேட்டுகளில் பணியாற்றும் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பளம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதால் வருமான வரித்துறையினரால் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அதன்பிறகு கணக்கை முறையாக காட்டியதால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. எனவே தற்போதும் 2-வது முறையாக கணக்குகளை சரிவர காட்டினால்தான் வங்கி கணக்குகள் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
போனஸ் கிடைக்குமா?
இதற்கிடையில் வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் இன்னும் போனஸ் மற்றும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ளதால் போனஸ் மற்றும் நிலுவை சம்பளம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எனினும் ஒரு சில நாட்களில் போனஸ் மற்றும் நிலுவை சம்பள தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் தரப்பில் கூறியதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.