ஊட்டி படகு இல்ல வளாகத்தில் 62 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஊட்டி படகு இல்ல வளாகத்தில் 62 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஊட்டி
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி ஊட்டி படகு இல்ல வளாகத்தில் 62 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு கடைகள்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் முதலில் 48 நகர்வு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதாவது கையில் பொருட்களை வைத்துக்கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
ஆனால் அனுமதியின்றி தற்காலிக ஷெட் அமைத்து வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர். இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அவ்வப்போது நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
ஐகோர்ட்டு உத்தரவு
இதற்கிடையில் புதிதாக 14 பேர் கடைகளுக்கு அனுமதி வாங்கினர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஊட்டி படகு இல்ல வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் அங்கு நேற்று காலை 8 மணியளவில் சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேஷ், ஊட்டி படகு இல்ல மேலாளர் சாம்சன் மற்றும் அதிகாரிகள் சென்று, அனுமதியின்றி வைத்த 62 கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது, எனவே வியாபாரிகள் தாங்களாகவே பொருட்களை காலி செய்துவிட்டு ஷெட்டுகளை அகற்ற வேண்டும் என்றனர்.
அகற்றம்
இதையடுத்து வியாபாரிகள் தங்கள் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பழங்கள், உல்லன் ஆடைகள் உள்பட விற்பனை பொருட்களை சாக்கு பைகளில் நிரப்பி வாகனங்கள் மூலம் எடுத்து சென்றனர். மேலும் ஷெட்களை அகற்றினர்.
இதையொட்டி ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அறிக்கை தாக்கல்
இந்த நடவடிக்கை காரணமாக காலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் படகு இல்லத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் நுழைவுவாயில் மூடப்பட்டு இருந்தது. கடைகள் அகற்றப்பட்ட பிறகே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
ஊட்டி படகு இல்ல வளாகத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் ஆக்கிரமிப்பு கடைகள் பிரச்சினை இருந்து வந்த நிலையில், தற்போது ஆவின் கடை உள்பட 62 கடைகள் அகற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.