சாத்தான்குளம் அருக ஓடை தண்ணீரை பாய்ச்சுவதில் இரு கிராம விவசாயிகள் இடையே மோதல்
சாத்தான்குளம் அருக ஓடை தண்ணீரை பாய்ச்சுவதில் இரு கிராம விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே ஓடைத் தண்ணீரை பாய்ச்சுவதில் வேலன்புதுக்குளம், நொச்சிக்குளம் விவசாயிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதால் தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
ஓடைத்தண்ணீரை...
சாத்தான்குளம் வட்டத்தில் மழை நீர் மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து 3வது ரீச்சில் திறந்து விடும் தண்ணீர் பெருமாள்குளம் நிரம்பி நொச்சிக்குளம், வேலன்புதுக்குளம், செட்டிக்குளம் பகுதி குளங்களுக்கு வரும் வகையில் செக்கால் ஓடை உள்ளது. இதில் வேலன்புதுக்குளத்துத்து தண்ணீர் செல்லும் வகையில் நொச்சிக்குளம் - பெருமாள்குளம் இடையே செக்கோல் ஓடையில் நான்கு கால் கொண்ட மடை உள்ளது. இதன்மூலம் குளங்களுக்கு தண்ணீர் சென்று வருகிறது.
விவசாயிகளுக்கு பிரச்சினை
செக்கால் ஓடையில் வேலன்புதுக்குளம் விவசாயிகள் மறித்து தண்ணீர் எடுத்து செல்வதாக நொச்சிக்குளம் விவசாயிகளும், வேலன்புதுக்குளத்துக்கு தண்ணீர் வரவிடாமல் மறித்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகளும் புகார் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை உண்டானது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து சாத்தான்குளம் தாலுகா அலுவலகதத்தில் தாசில்தார் விமலா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், விவசாயிகள் சார்பில் நெடுங்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவர் பரசமுத்து, பொன்பாண்டி, நொச்சிக்குளம் விவசாயிகள் சங்கத் தலைவர் மலையாண்டிபிரபு உள்ளிட்ட இருத்தரப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
உடன்பாடு ஏற்படவில்லை
இதில் செக்கால் ஓடையில் தண்ணீர் வந்தால் நொச்சிக்குளம், செட்டிக்குளம் பகுதிக்குத்தான் வர வேண்டும். வெள்ளம் வரும் காலங்களில் அதிகமாக தண்ணீர் வந்தால் வேலன்புதுக்குளம் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என நொச்சிக்குளம் விவசாயிகள் தெரிவித்தனர். வேலன்புதுக்குளத்துக்கு செக்கால் ஓடையில் பள்ளமாகி உள்ளதை சீர் செய்து முறையாக தண்ணீர் விட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதில் சரியான முடிவு எட்டப்படாததால் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
அதிகாரிகள் நடவடிக்கை
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் 2 நாள்கள் கழித்து சரியான முடிவு எடுத்து அரசு விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதன்படி விவசாயிகள் கலைந்து சென்றனர்.