வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

திருமண பத்திரிகை வைப்பதுபோல் நடித்து வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணின் கைகளை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற தம்பதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-10-25 07:27 GMT
கோப்பு படம்
சேலையூர்,

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் அருகே உள்ள அகரம்தென், குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சுகுணா. இவர்களுக்கு புஷ்பலதா என்ற மகள் உள்ளார்.

 ரவி பணி காரணமாக வெளியில் சென்றுவிட்ட நிலையில், சுகுணாவும் துணி எடுப்பதற்காக கடைக்கு சென்றுவிட்டார். புஷ்பலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் கணவன்-மனைவி போல் ஒரு ஆணும், பெண்ணும் ரவியின் வீட்டுக்கு வந்தனர். வீட்டில் தனியாக இருந்த புஷ்பலதாவிடம், நாங்கள் ரவியின் உறவினர்கள். திருமண பத்திரிகை வைக்க வேண்டும் என்று கூறி தாம்பூல தட்டு ஒன்றை எடுத்து வருமாறு கூறினர்.

இதனை நம்பிய புஷ்பலதா, தாம்பூல தட்டை எடுக்க வீட்டின் சமையல் அறைக்கு சென்றார். அப்போது கணவன்-மனைவி இருவரும் அவரை பின்தொடர்ந்து சென்று கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் புஷ்பலதாவின் இரண்டு கைகளையும் கட்டிப்போட்டு விட்டு, சத்தம் போடாமல் இருக்க வாயிலும் துணியை வைத்து திணித்தனர்.

அதன்பிறகு வீட்டில் இருந்த டி.வி.யின் சத்தத்தையும் அதிகமாக வைத்துவிட்டு, பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு புஷ்பலதா, நடந்த சம்பவம் குறித்து தனது தாய் சுகுணாவுக்கு தகவல் கொடுத்தார். இது குறித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களின் கைரேகை மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

மேலும் உண்மையிலேயே புஷ்பலதாவை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்றனரா?, வந்தவர்கள் உண்மையான கணவன்-மனைவிகளா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்