பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1-ந் தேதி பள்ளிகள் திறப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற 1-ந் தேதி முதல் அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. ஆகிய பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
அப்போது கலெக்டர் கூட்டத்தை துவக்கி வைத்து கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.
3 லட்சம் மாணவர்கள்
திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரையில் வருகின்ற 1-ந் தேதி முதல் 1,715 பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதில் தொடக்கக் கல்வி பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 37 ஆயிரத்து 195 மாணவ மாணவியர்களுக்கும், பிற பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 72 ஆயிரத்து 520 மாணவ மாணவிகள் என மொத்தம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சத்து 9 ஆயிரத்து 715 மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு வருகை புரிய உள்ளனர்.
எனவே பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள், பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் உட்பட பள்ளி தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்துதல், உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஆலோசனைகள்
பள்ளிகளில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித் தருதல், வகுப்பறைகள், பள்ளிகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், மாணவ, மாணவியர்கள் கற்பதில் தொய்வு ஏற்படாத வண்ணம் கற்பிக்கும் முறையை ஊக்கப்படுத்தி திறம்பட கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சாவித்திரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் இடைநிலை மற்றும் மேல்நிலை நேர்முக உதவியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளித் துணை ஆய்வாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.