வாலாஜாபாத் அருகே 200 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுப்பு
வாலாஜாபாத் அருகே 200 ஆண்டுகள் பழமையான நடு்கல் கண்டெடுக்கப்பட்டது.
நடுகல்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவுக்கு உள்பட்ட பழைய சீவரம் கிராமத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அருகே புதர்கள் மண்டிய பகுதியில் கல்வெட்டுடன் சிற்பங்கள் செதுக்கிய கல் ஒன்று இருப்பதை கிராம மக்கள் கண்டெடுத்தனர். அவர்கள் இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் பழைய சீவரம் கிராமத்திற்கு சென்று நடுகல்லை சுத்தம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த நடுகல் 2 அடி அகலமும் 6 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அந்த கல்லில் 6 வரிகள் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் ஒரு நிலையில் அதன் ஒரு பகுதி சிதைந்து காணப்பட்டது.
கோரிக்கை
மேலும் அந்த நடுகல்லில் கைகளில் கத்தி, வில், அம்புடன் கூடிய 2 வீரர்களின் உருவம் செதுக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அதன்படி 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர மன்னர் காலத்தை சேர்ந்த குறுநில மன்னர் ஒருவரின் மெய்க்காப்பாளர்கள் 2 பேர் போரில் மன்னரின் உயிரை காக்க சண்டையிட்டு வீர மரணம் அடைந்ததால் அந்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் எழுப்பப்பட்ட நடுகல் என்பதும், இன்று அந்த நடுகல் உடைந்த நிலையில் கவனிப்பாரின்றி கிடப்பதையும் கண்டறிந்தனர்.
மேலும் இப்படி கடந்த கால வரலாற்றை, நிகழ்கால சமுதாயத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரிய வரலாற்று ஆவணமான நடுகல் அழியும் நிலையில் உள்ளது. உடனடியாக தொல்லியல் துறையினர் கவனம் செலுத்தி நடுகல்லை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் மற்றும் பழைய சீவரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.