2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

கலபுரகியில் ஆண் குழந்தை இல்லாததால் கணவர் குடும்பத்தினர் கொடுத்த தொல்லையால் 2 குழந்தைகளுடன், கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்தார். 4 வயது சிறுமியை கிராமத்தினர் மீட்டு இருந்தனர்.

Update: 2021-10-24 21:36 GMT
பெங்களூரு:

ஆண் குழந்தை இல்லாததால்...

  கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா நிம்பர்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாட்டலா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஈஸ்வரி என்ற மகளும், சாவித்திரி (2) மற்றும் பிறந்து 6 மாதங்களே ஆன கவுரம்மா என்ற பெண் குழந்தைகளும் இருந்தது. லட்சுமியின் கணவர் கூலித் தொழிலாளி ஆவார். லட்சுமியின் கணவர், அவரது குடும்பத்தினர் ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தார்கள்.

  ஆனால் லட்சுமிக்கு பிறந்தது 3 பெண் குழந்தைகள் என்பதால், லட்சுமியை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அடித்து, உதைத்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக லட்சுமிக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல், நேற்று காலையிலும் அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது.

2 குழந்தையுடன், பெண் தற்கொலை

  உடனே தனது குழந்தைகள் ஈஸ்வரி, சாவித்திரி, கவுரம்மாவை அழைத்து கொண்டு லட்சுமி வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் கிராமத்திற்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள கிணற்றுக்குள் 3 குழந்தைகளுடனும் லட்சுமி குதித்துள்ளார். இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே கிராமத்தை சேர்ந்த சிலர் கிணற்றுக்குள் குதித்து குழந்தைகள் உள்பட லட்சுமியையும் மீட்க நடவடிக்கை எடுத்தார்கள்.

  ஆனால் எதிர்பாராத விதமாக லட்சுமி, குழந்தைகள் சாவித்திரி, கவுரம்மா கிணற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டாா்கள். சிறுமி ஈஸ்வரியை மட்டும் கிராமத்தினர் மீட்டனர். உடனடியாக அந்த சிறுமி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவளது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினர் தொல்லை

  முன்னதாக இதுபற்றி தகவல் அறிந்ததும் நிம்பர்கா போலீசார் விரைந்து வந்து லட்சுமி, அவரது 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது லட்சுமிக்கு 3 பெண் குழந்தை பிறந்திருந்தது, அவரது கணவருக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. கணவர் குடும்பத்தினரும் ஆண் குழந்தை மோகத்திலேயே இருந்துள்ளனர். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை கவுரம்மா பிறந்ததில் இருந்தே லட்சுமிக்கு தொல்லை கொடுத்துள்ளனர்.

  மேலும் லட்சுமி ராசி இல்லாதவர் எனக்கூறி, அவரை அடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த லட்சுமி, தனது குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததும், அதிர்ஷ்டவசமாக மூத்த குழந்தை ஈஸ்வரியை கிராமத்தினர் காப்பாற்றியதும் தெரியவந்தது. இதுகுறித்து நிம்பர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியின் கணவர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்