சத்தி பகுதியில் தொடர் மழையால் செங்கல் விலை உயர்வு; ரூ.11-க்கு விற்பனை

சத்தியமங்கலம் பகுதியில் தொடர் மழையால் செங்கல் விலை உயர்ந்து ரூ.11-க்கு விற்பனை ஆகிறது.

Update: 2021-10-24 21:30 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பகுதியில் தொடர் மழையால் செங்கல் விலை உயர்ந்து ரூ.11-க்கு விற்பனை ஆகிறது.
விலை உயர்வு
சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொண்டப்பநாய்க்கன்பாளையம், டி.ஜி.புதூர், அத்தியப்பகவுண்டன்புதூர், இண்டியம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளது. இங்கிருந்து செங்கல்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் வரை ரூ.7-க்கு விற்ற ஒரு செங்கல், தற்போது விலை உயர்ந்து ரூ.11-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அனுமதி வழங்க கோரிக்கை
இதுகுறித்து செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறும்போது, ‘செங்கல் தயாரிக்க தேவைப்படும் செம்மண் எடுத்துக்கொள்ள தமிழக அரசு இன்னும் முறையான அனுமதி அளிக்கவில்லை. செங்கல் தயாரிக்க போதுமான செம்மண் கிடைக்காததால் செங்கல் தயாரிப்பு பணியில் உள்ள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே தமிழக அரசு உடனடியாக செங்கல் தயாரிக்க தேவைப்படும் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்