ஈரோட்டில் ரூ.3½ கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு

ஈரோட்டில் ரூ.3½ கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கிடங்கினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

Update: 2021-10-24 21:29 GMT
ஈரோடு
ஈரோட்டில் ரூ.3½ கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கிடங்கினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். கலெக்டர் செய்தி
வாக்குப்பதிவு எந்திரம்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், பவானி, பவானிசாகர், அந்தியூர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை பாதுகாப்பாக வைப்பதற்கு தனி இடம் இல்லாமல் ஈரோடு ரெயில்வே காலனி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் மூலம் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் ரூ.3 கோடியே 50 லட்சம் செல்வில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்காக பாதுகாப்பு கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கிடங்கில், ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரும் வழிகள், அதற்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
ஈரோடு ரெயில்வே காலனி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம், வி.வி.பேட் போன்றவைகளை பாதுகாப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. தேர்தல் நேரத்தில் பள்ளிக்கூட பணிகளும், பள்ளிக்கூடங்களில் நடக்கும் தேர்வு நேரத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதிலும் சில சிரமங்கள் ஏற்படுகிறது.
இறுதிக்கட்ட பணிகள்
இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் மூலம் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தளம், முதல் தளம் என 2 தளங்களுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இங்கு நவீன முறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, மின்சார வசதி, பாதுகாப்பு வசதி, தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கான இட வசதி போன்றவையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் திறப்பு விழா நடந்ததும், ரெயில்வே காலனி பள்ளிக்கூடத்திலும் மற்றும் பிற இடங்களில் வைக்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான அனைத்து உபகரணங்களும் இந்த பாதுகாப்பு கிடங்கிற்கு எடுத்து வரப்பட்டு பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்