ஈரோட்டில் பரவலாக மழை: நிரம்பி வழியும் சூரம்பட்டி அணைக்கட்டு
ஈரோட்டில் பெய்த பரவலான மழையால் சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
ஈரோடு
ஈரோட்டில் பெய்த பரவலான மழையால் சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
அணைக்கட்டு நிரம்பியது
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோட்டிலும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்கிறது. இதனால் பெரும்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை உள்பட சிறிய ஓடைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் தாழ்வான இடங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்தநிலையில் மழை பெய்ததால் சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. அங்கு தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளியை உருக்கி கொட்டுவதுபோல் தண்ணீர் விழுகிறது.
அணைக்கட்டு நிரம்பியதால் அங்கிருந்து மதகு வழியாக நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
ஆகாயத்தாமரை
சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி இருந்தாலும், பச்சை போர்வை போர்த்தியதை போல ஆகாயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்து காணப்படுகிறது.
அணைக்கட்டில் தேங்கி நிற்கும் தண்ணீர் தெரியாத வகையில் ஆகாயத்தாமரை முழுவதுமாக படர்ந்து உள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் மதகு உள்ள பகுதியிலும் ஆகாயத்தாமரை அடைத்து உள்ளது.
இதனால் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.
எனவே அணைக்கட்டு முழுவதும் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அம்மாபேட்டை - 14.6
பவானி - 10.4
சத்தியமங்கலம் - 10
குண்டேரிப்பள்ளம் - 8.2
வரட்டுப்பள்ளம் - 7.2
கொடிவேரி - 6
கோபிசெட்டிபாளையம் - 5
தாளவாடி - 4
ஈரோடு - 2
பவானிசாகர் - 1