ஈரோட்டில் ரூ.10 கோடி செலவில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா- மாதிரி ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது

ஈரோட்டில் ரூ.10 கோடி செலவில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. அங்கு மாதிரி ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.

Update: 2021-10-24 21:27 GMT
ஈரோடு
ஈரோட்டில் ரூ.10 கோடி செலவில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. அங்கு மாதிரி ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.
அறிவியல் தொழில்நுட்ப பூங்கா
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோட்டில் முதல் முறையாக அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியில் சூரம்பட்டி அணைக்கட்டு அருகில் நடந்து வருகிறது.
சுமார் ரூ.10 கோடி செலவில் அங்கு பிரமாண்டமாக அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கு மாணவ-மாணவிகள் அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டப்படுகிறது. மேலும், மாணவ-மாணவிகளை கவரும் வகையில் யானை, டைனோசர் போன்ற விலங்குகளின் உருவ சிலைகள் அமைக்கப்பட உள்ளன.
ராக்கெட் ஏவுதளம்
பூங்கா பகுதியில் மாதிரி ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் மாதிரி ராக்கெட்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த ராக்கெட்டுகள் புறப்படுவதற்கு தயாராக உள்ளதைபோல மாதிரி ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி உலக உருண்டை, டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. மாதிரி வடிவங்கள், விசைகளை அறிந்து கொள்ளும் கருவிகள் என ஏராளமான சிறிய கருவிகள் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில், “மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மாணவ-மாணவிகளின் அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்தும் வகையிலும், பல்வேறு தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் பூங்கா அமைக்கப்படும். இந்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்து விடும். அதன்பிறகு அறிவியல் தொழில்நுட்ப பூங்காவை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்”, என்றார்.

மேலும் செய்திகள்