தடுப்பூசி செலுத்த சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை அபேஸ்
தடுப்பூசி செலுத்த சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை அபேஸ் செய்த வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
திருச்சி
திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியாயி (வயது 60). இவர், ஏற்கனவே முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 2-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு கருமண்டபத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தார். ஆனால் அந்த பள்ளியில் முகாம் நடைபெறவில்லை.
அப்போது மாரியாயியை வழிமறித்த 2 வாலிபர்கள், அவரிடம் எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்டனர். அதற்கு அவர், கொரோனா தடுப்பூசி செலுத்த செல்வதாக கூறினார். அதற்கு அவர்கள், தடுப்பூசி செலுத்த போகும்போது நகைகளை அணிந்து செல்லக்கூடாது. கழட்டி கொடுங்கள் பர்சில் வைத்து தருகிறோம் என்று கூறி உள்ளனர். இதனை நம்பி மாரியாயியும் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் சங்கிலியை கழட்டி கொடுத்தார். அந்த வாலிபர்கள் நகையை வாங்கி பர்சில் வைத்து கொடுத்துவிட்டு சென்று விட்டனர். மாரியாயி சிறிதுதூரம் சென்றதும் பர்சை திறந்து பார்த்தபோது, அதில் தங்க சங்கிலி இல்லாமல் இருந்தது.
கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நடுரோட்டில் அமர்ந்து கதறி அழுதார். இதைக்கண்ட அந்த பகுதியினர் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று மாரியாயியிடம், சங்கிலியை அபேஸ் செய்த மர்ம நபர்களின் அங்க அடையாளங்களை கேட்டு விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.