தீபாவளி பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள்
நெல்லையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு கடை வீதிகளில் மக்கள் குவிந்தனர்.;
நெல்லை:
நெல்லையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை குதூகலமாக கொண்டாடுவார்கள். தீபாவளி அன்று பொது மக்கள் அதிகாலையில் உடலில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிவார்கள். மேலும் இனிப்பு, பலகாரம் செய்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இப்போதே களை கட்ட தொடங்கி உள்ளது. கடந்த 1-ந்தேதி முதல் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடைவீதிகளில் கூட்டம்
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை டவுன், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, புதிய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி இனிப்புகள், பலகாரம் செய்ய தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். இதே போல் ஜவுளி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்களுக்கு பிடித்த சேலைகள், சுடிதார் உள்ளிட்ட புத்தாடைகளை தேர்வு செய்து வாங்கினார்கள். இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அவர்களுக்கு விரும்பிய ரகங்களை அள்ளிச்சென்றனர். புதிதாக திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகளுக்கு தலை தீபாவளி கொண்டாடும் வகையில் பெண் வீட்டார் தரப்பில் புத்தாடை வாங்கி கொடுத்தனர்.
தீபாவளிக்கு குறைந்த நாட்களே இருப்பதால் இப்போதே துணி எடுத்து சட்டை தைக்கும் வேலையை தொடங்கி உள்ளனர்.
போலீஸ் கண்காணிப்பு
இதையொட்டி பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கடைவீதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்களிடம் நகை, பணத்தை திருடும் கும்பலை பிடிக்க போலீசார் சாதாரண உடையிலும் ரோந்து சுற்றி வருகிறார்கள். இதுதவிர பொது மக்கள் அதிகளவு தங்களது வாகனங்களில் கடைவீதிகளுக்கு வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியிலும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீபாவளி கூட்டத்தை கண்காணிக்கும் வகையில் டவுன் 4 ரதவீதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போலீசார் அதன் மீது நின்று தொலை நோக்கி மூலமும், நேரடியாகவும் கண்காணித்து வருகிறார்கள்.