தள்ளுபடி விலையில் கார் தருவதாக வாலிபரிடம் ரூ.6½ லட்சம் மோசடி
ராதாபுரம் அருகே தள்ளுபடி விலையில் கார் தருவதாக வாலிபரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பெத்தரெங்கபுரத்தை சேர்ந்தவர் வில்சன் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள காரை சிறப்பு தள்ளுபடியாக ரூ.7 லட்சத்துக்கு வழங்கப்படுவதாக ஒரு தகவல் இடம் பெற்றிருந்தது.
உடனே வில்சன் அதன் கீழே கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் ரூ.7 லட்சத்தை ஆன்லைன் மூலம் எனக்கு அனுப்பினால் உங்கள் முகவரிக்கு கார் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய வில்சன், ஆன்லைன் மூலம் அந்த நபருக்கு ரூ.6½ லட்சத்தை அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அந்த நபர் வில்சனுக்கு காரை வழங்கவில்லை. பின்னர் அந்த நபரின் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்கவில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது வில்சனுக்கு தெரிய வந்தது.
உடனே அவர் இதுகுறித்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.