நெடுஞ்சாலை பணிக்காக வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
நெடுஞ்சாலை பணிக்காக வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.;
ஜெயங்கொண்டம்:
நெடுஞ்சாலை பணிக்காக...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தில் 18 குடும்பங்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இதையடுத்து அவர்கள் அந்த இடத்தில் வீடுகள் கட்டி கடந்த 21 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலை பணிக்காக சின்னவளையம் கிராமத்தில் அரசால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு, அதில் வீடு கட்டி உள்ளவர்களுக்கு மாடி வீட்டுக்கு ரூ.2.30 லட்சம், ரூ.2.70 லட்சம் என்றும், ஓட்டு வீட்டுக்கு ரூ.1 லட்சம், கூரை வீட்டிற்கு ரூ.30 ஆயிரம் என்று தருவதாக அதிகாரிகள் பொதுமக்களிடம் கூறியுள்ளனர்.
அதன்படி தொகை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பொதுமக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது போல் வேறு இடங்களில் இடம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள், இடம் இல்லை என்று கூறி, இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடம் கூறியதாக தெரிகிறது.
மண்எண்ணெய் கேனுடன் திரண்டனர்
இந்நிலையில் நேற்று அந்த வீடுகளை இடிக்க எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இதனை கண்ட பொதுமக்கள் தங்களுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் வேறு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இடத்தை காலி செய்யாமல் மண்எண்ணெய் கேனுடன் திரண்டு காத்திருந்தனர். இதையடுத்து அவர்களுடன் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், தாசில்தார் அருள்செல்வி, மண்டல துணை தாசில்தார் பழனிவேலன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் என பலர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முடிவில் அதிகாரிகள், வருகிற 6-ந் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும், அவ்வாறு காலி செய்யாவிட்டால் வருகிற 8-ந் தேதி எந்த முன்னறிவிப்புமின்றி ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்து, நோட்டீசை வாங்க மறுத்த உரிமையாளர்கள் வீட்டில் அதனை அதிகாரிகள் ஒட்டிச்்சென்றனர். மேலும் இந்த முடிவு தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பெற முயன்றபோது, பொதுமக்கள் கையெழுத்து போட மறுத்தனர்.
முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இங்கு தினக்கூலி தொழிலாளர்கள், பூ வியாபாரிகள், கட்டிட தொழிலாளிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள் என சுமார் 18 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இழப்பீடு தொகை சிறிய அளவே வழங்கப்படுகிறது. அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் என அனைவரிடமும் முறையிட்டு, இழப்பீட்டு தொகையை அதிகப்படுத்தி தரவும், மாற்று இடம் ஏற்படுத்தித் தரவும் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் தாங்கள் குடியிருக்க மாற்று இடம் வழங்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) ராஜன், இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், சுமதி, ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.