காப்பகங்களுக்கு ரூ.20 லட்சம் பொருட்கள்- போலீஸ் கமிஷனர் வழங்கினார்
நெல்லையில் காப்பகங்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை, போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் தலைமையில் கடந்த 16-ந் தேதி அனைத்து காப்பக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது காப்பகங்களில் தங்கி இருப்போருக்கு தேவையான உடை, பாதுகாப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு உபகரணங்கள், கணினி வசதி, போர்வைகள், படுக்கை வசதி போன்றவை குறித்து கேட்கப்பட்டது.
இதையடுத்து காப்பக நிர்வாகிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் நன்கொடையாளர்கள் மூலம் ஏற்பாடு செய்தார். அவற்றை காப்பகங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
நெல்லை மாநகரில் செயல்பட்டு வரும் பெண் குழந்தைகள், சிறுவர்கள், ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்டோருக்கு என மொத்தம் 17 காப்பகங்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் வழங்கினார். மேலும் தீபாவளியையொட்டி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகளையும், காப்பக பணியாளர்களுக்கு புத்தாடைகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமார், (போக்குவரத்து-குற்றம்) சுரேஷ்குமார், கூடுதல் துணை கமிஷனர் சங்கர், மதுரை அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர் சிவகுமார், குழந்தைகள் நல தலைவர் சந்திரகுமார், நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதா நன்றி கூறினார்.