குண்டும், குழியுமான சாலை
மதுரை அண்ணாநகர், அப்போலோ மருத்துவமனையில் இருந்து மத்திய மார்க்கெட் செல்லும் நகரின் முக்கிய சாலையானது குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலையை சீரமைப்பார்களா?
பாஸ்கரன். கீழடி.
குறைந்த மின்அழுத்தம்
ராமநாதபுரம் மாவட்டம் கோசவான்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முத்தமிழ் நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின் அழுத்தம் உள்ளது. இதன் காரணமாக மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முத்தமிழ்நகர்.
ஆபத்தான மின்கம்பம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் குடியிருப்புகளுக்கு அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது, கடந்த சில மாதங்களாக இந்த மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. அது எப்போது சாய்ந்து விழும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
தங்கமாரியப்பன், வெம்பக்கோட்டை.
சிக்னல் சரிசெய்யப்படுமா?
மதுரை தெற்கு வாசல் சின்னக்கடை வீதி சந்திப்பில் உள்ள சிக்னல் வேறு பக்கம் திரும்பிய நிலையில் உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சிக்னலை சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
அசோக், மதுரை.
சேறும், சகதியுமான சாலை
வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயகரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்த கண்ணகுடும்பன்பட்டியில் சாலை வசதி இல்லை. மண் சாலையாக இருப்பதால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. அதில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இப்பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
மாரியப்பன், கண்ண குடும்பன்பட்டி.
கொசுத்தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காட்டு பரமக்குடி பகுதியில் காலனி தெருவில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் கொசுக்கடியால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. மக்களின் நலன்கருதி சாக்கடை கால்வாய் தேங்காமல் இருக்கவும், கொசுமருந்து அடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோகுல்கண்ணா, பரமக்குடி.