மேலும் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்

கடலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது.

Update: 2021-10-24 17:37 GMT
கடலூர், 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே 21 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்,  நேற்று 
 திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் ரோடு 25 வயது இளம்பெண், குறிஞ்சிப்பாடி ரோட்டு மருவாய் 36 வயது ஆண், குறிஞ்சிப்பாடி புதுப்பேட்டை 20 வயது வாலிபர் ஆகிய 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பு நடவடிக்கை

அதில் நேற்று மாலை 36 வயது ஆணுக்கு உடல் நிலை மோசமானது. அவர் உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்