பழைய குற்றவாளிகளை பிடித்து போலீசார் விசாரணை

பழைய குற்றவாளிகளை பிடித்து போலீசார் விசாரணை

Update: 2021-10-24 17:11 GMT
கோவை

கோவையில் ரூ.1½ கோடி நகை கொள்ளை போன வழக்கில் பழைய குற்றவாளிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ரூ.1½ கோடி நகை கொள்ளை

கோவை ஜி.என்.மில்ஸ் அருகே உள்ள அதிர்ஷ்ட லட்சுமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). கடந்த 22-ந் தேதி இரவில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்தனர். 

பின்னர் அவர்கள் அங்கு பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை, வைர நெக்லஸ் 2, வைரம் பதித்த செயின் 2, வைரம் பதித்த வளையல் கள் 2 என மொத்தம் ரூ.1½ கோடி நகையை கொள்ளை யடித்து சென்றனர். 

10 தனிப்படைகள் 

இது குறித்து தகவலறிந்த கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

அத்துடன் இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 4 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

அவர்கள் பழைய குற்றவாளிகள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பழைய குற்றவாளிகளிடம் விசாரணை 

இந்த கொள்ளை வழக்கில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து அதை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

மேலும் கதவுகளை உடைத்து திருடிய வழக்கில் கைதாகி விடுதலையான பழைய குற்றவாளிகளை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அதுபோன்று திருட்டு வழக்கில் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையானவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, சம்பவம் நடந்த அன்று அவர்கள் எங்கு இருந்தனர் என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

அதுபோன்று அருகில் உள்ள கட்டிடங் கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்