அரசம்பாளையம் செல்ல அடைக்கப்பட்ட வழி திறக்குமா
அரசம்பாளையம் செல்ல அடைக்கப்பட்ட வழி திறக்குமா
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த மேல்நிலைப்பள்ளியில் அரசம்பாளையம் அருகிலுள்ள குமாரபாளையம், சொலவம்பாளையம், கொண்டம்பட்டி, காரச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் அரசம்பாளையம் அருகில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குமாரபாளையத்தில் இருந்து மட்டும் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் குமாரபாளையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசம்பாளையத்திற்கு இடையே உள்ள மீட்டர் கேஜ் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கு வந்து சென்றனர்.
இந்தநிலையில் போத்தனூர்-பொள்ளாச்சி இடையே உள்ள ரெயில் பாதை 2009-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. அப்போது குமாரபாளையத்தில் இருந்து அரசம்பாளையம் செல்லும் வழியில் இருந்த ரெயில்வே தண்டவாளம் பள்ளமான பகுதியில் அமைக்கப்பட்டதால் அந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது.
பின்னர் அந்த பாலம் அடைக்கப்பட்டது. இதனால் குமாரபாளையத்தில் இருந்து அரசம்பாளையம் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.குமாரபாளையத்தில் இருந்து அரசம்பாளையத்திற்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் தற்போது 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி அரசம்பாளையம் வந்து செல்கின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- தற்போது போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடம் மின் வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும் நாங்கள் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள குறுகலான வழித்தடத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.
இதைதவிர்க்க ரெயில்வே அதிகாரிகள் மேம்பாலம் குறுக்கே மூடப்பட்டுள்ள சிமெண்ட்தடுப்புகளை அகற்றி மாணவர்கள் பொதுமக்கள் எளிதில் பாதுகாப்பாக செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். வரும் 1-ம்தேதி முதல் தமிழக அரசு பள்ளிகள் திறக்க உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்பு அரசு அதிகாரிகள், ரெயில்வே துறை அதிகாரிகள் குமாரபாளையம்-அரசம்பாளையம் இடையே உள்ள ரெயில்வேமேம்பாலத்தை பார்வையிட்டு வழித்தடத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்றனர்.
மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சொலவம்பாளையம், அரசம்பாளையம் ஊராட்சி மன்றம், கிணத்துக்கடவு ஒன்றியம் சார்பில் ரெயில்வே துறைக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. குமார பாளையத்தில் இருந்து அரசம்பாளையம் செல்ல அடைக்கப்பட்ட வழிப்பாதை திறக்குமா? என்பது மாணவ -மாணவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.