ஜாமீனில் வெளியே வந்ததால் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்; வாலிபர் கைது
கோஷ்டி மோதலில் கைதான நண்பர், ஜாமீனில் வெளியே வந்ததால் பட்டாசு வெடித்து கொண்டாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியில் கடந்த 14-ந்தேதி இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 16 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் சந்தோஷ்குமார், தங்கமுத்து, நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களில் சந்தோஷ்குமார், தங்கமுத்து ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்தனர். இதனால் சந்தோஷ்குமார் தரப்பை சேர்ந்த பிரகாஷ் (வயது 35) என்பவர், ஊர் மந்தையில் கோவில் முன்பாக பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொது இடத்தில் பட்டாசு வெடித்ததாக பிரகாஷ் மீது வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.