கொடைக்கானல் நாயுடுபுரத்தில் கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம்
கொடைக்கானல் நாயுடுபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட கருப்பணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நாயுடுபுரம், ஈ.சி.ஜி. சாலையில் கருப்பணசாமி மற்றும் விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. இதையடுத்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 21-ந்தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்தநிலையில் நேற்று அதிகாலை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி பூஜை, 4-ம் கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் காலை 10.30 மணி அளவில் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. அதன்பிறகு கருப்பணசாமி, மதுரைவீரன், முனீஸ்வரர், மகா கணபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் கொடைக்கானலை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் கருப்பணசாமி கோவில் அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி நிர்வாகக்குழு தலைவர் குமரன், செயலாளர் கார்த்திக், பொருளாளர் சுரேஷ், துணைத்தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முன்னதாக எஸ்.ஆர்.ஜே. பில்டர் ரவிச்சந்திரன் சார்பில் சாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரவில் சாமி மின் அலங்கார ரதத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தார்.