வாகன நெரிசல் காரணமாக திருப்பூர் குமரன் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

வாகன நெரிசல் காரணமாக திருப்பூர் குமரன் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

Update: 2021-10-24 15:26 GMT
திருப்பூர், 
வாகன நெரிசல் காரணமாக திருப்பூர் குமரன் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆம்புலன்சுகளுக்கு கூட வழிகிடைக்காமல் ஊர்ந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது.
குமரன் ரோடு
பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். மாநகர பகுதியில் மட்டும் 8 லட்சம் தொழிலாளர்கள் வசிப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளன. வாரம் முழுவதும் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் கடைவீதிகளுக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்காரணாக வழக்கமான நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதாலும், போனஸ் பெற்றுள்ளதாலும் நேற்று கடைவீதிகளில் பொருட்களை வாங்க வந்தார்கள். இதனால் பிரதான சாலைகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகன போக்குவரத்து அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. குமரன் ரோட்டில் பிரபல ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், ஆண்களுக்கான ஆடையகங்கள் அதிகம் உள்ளன. வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ஷோரூம்களும் உள்ளன. இதன்காரணமாக கடைகளுக்கு வருபவர்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து குமரன் ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு கடைகளுக்கு செல்வதால் குமரன் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேற்று ஏற்பட்டது.
போக்குவரத்து ஸ்தம்பித்தது
நேற்று காலை டவுன்ஹாலில் இருந்து எம்.ஜி.ஆர். சிலையை கடப்பதற்கு 20 நிமிடங்கள் ஆனது. அந்தளவுக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. குறிப்பாக பென்னி காம்பவுண்டில் இருந்து கோர்ட்டு ரோடுக்கு வாகனங்கள் கடந்து செல்வதால் குமரன் ரோட்டில் ஒட்டுமொத்தமாக வாகன போக்குவரத்து தடைபட்டது. ரோட்டோரம் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் ஒருபுறம், கடைவீதிகளுக்கு செல்லும் மக்கள் மறுபுறம், பழைய பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் என குமரன் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை வீதிகளுக்கு மக்கள் வருவார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து வாகன நெரிசலை தவிர்ப்பதற்கான நடவடிக்கையை மாநகர போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் குமரன் ரோட்டில் குறைந்த எண்ணிக்கையில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள். ஒரு கட்டத்தில் வாகன நெருக்கடி அதிகரிக்க, அதிகரிக்க போக்குவரத்து போலீசாரால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
வாகனங்கள் ஊர்ந்து சென்ற வேளையில் ஆம்புலன்சுகள் வந்தபோதும், அதற்கு கூட வழி கிடைக்காமல் காத்திருந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. குமரன் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ரோட்டின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைத்தால் வாகனங்களை அதற்குள் நிறுத்தவும், பாதசாரிகள் நடந்து செல்லவும் வசதியாக அமையும். முந்தைய ஆண்டில் அதுபோன்ற ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டனர். ஆனால் இந்த ஆண்டு அதுபோன்ற முன்னேற்பாடுகளை கடைபிடிக்காததால் குமரன் ரோட்டில் வாகன நெரிசல் பெருகி போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்துவிட்டது.
இதுபோல் பார்க் ரோட்டிலும் வாகன நெரிசல் அதிகம் காணப்பட்டது. காதர்பேட்டை பனியன் சந்தைக்கு நேற்று மதியத்துக்கு மேல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளிக்கு முன்புறம் உள்ள சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு கடைகளுக்கு சென்று விட்டனர். இதனால் ராயபுரம் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் போனது. அந்த ரோட்டையே வாகனங்கள் ஆக்கிரமித்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதுபோல் பழைய பஸ் நிலையம், அவினாசி ரோடு, பி.என்.ரோடு பகுதியிலும் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. போக்குவரத்து நெருக்குடிக்கு தீர்வு காண மாநகர போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்