மின்சாரத்தால் தீப்பற்றினால் தண்ணீர் ஊற்றி அணைக்க கூடாது; மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை

வீடுகளில் மின்சாரத்தால் தீப்பற்றினால் தண்ணீர் ஊற்றி அணைக்க கூடாது என்று மின்வாரிய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2021-10-24 14:31 GMT
திண்டுக்கல்:
மழைக்காலங்களில் மின்சாரத்தால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, திண்டுக்கல் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் வினோதன் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
மழைக்காலங்களில் சாலையில் அறுந்துகிடக்கும் மின்கம்பி, பழுதடைந்த மின் கம்பங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் தொடக்கூடாது. உடனடியாக அதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி-மின்னல் ஏற்படும் போது வீடுகளில் உள்ள டி.வி., மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. மழை பெய்யும் சமயத்தில் திறந்த நிலையில் ஜன்னல், கதவு இருக்கும் போது அவற்றின் அருகில் நிற்கக்கூடாது. ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகளை தொடக்கூடாது.
மின்கம்பங்களில் ஆடு, மாடுகளை கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்களில் இரும்பு கம்பி மூலம் கொடி அமைத்து துணிகளை காய வைக்கும் செயல்களில் ஈடுபட கூடாது. மழை பெய்யும் போது மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது. குளிர்பதன பெட்டி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களுக்கு நில இணைப்புடன் கூடிய மின்இணைப்பை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். குளியலறை, கழிப்பறையில் ஈரமான இடங்களில் உள்ள சுவிட்சுகளை தொடுதல் கூடாது. வீடுகளில் மின்சாரத்தால் தீ விபத்து ஏற்படும் போது தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்