பழனி அருகே ஓடையில் வழிந்தோடிய வெண்ணிற நுரை
பழனி அருகே சிறுநாயக்கன்குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் ஓடையில் வெண்ணிய நுரை வழிந்தோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:
பழனி அருகே சிறுநாயக்கன்குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் ஓடையில் வெண்ணிய நுரை வழிந்தோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுநாயக்கன்குளம்
பழனி அருகே கோதைமங்கலம் சாலையோரத்தில் சிறுநாயக்கன்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு, பழனி வையாபுரிக்குளத்தில் இருந்து நீர்வரத்து ஏற்படும். பழனி பகுதியில் தற்போது பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
அதன்படி வரதமாநதி அணை நிரம்பி ஓடைகள் மூலம் பழனி, ஆயக்குடி பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் பழனி வையாபுரிக்குளம் நிரம்பி, சிறுநாயக்கன்குளத்துக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
சிறுநாயக்கன்குளம் நிரம்பியதால், அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் புதுக்குள ஓடை வழியாக பாப்பான்குளம், கோதைமங்கலம் பெரியகுளத்துக்கு செல்கிறது.
ஓடையில் பொங்கிய நுரை
இந்தநிலையில் புதுக்குள ஓடையில் நேற்று திடீரென்று நுரை பொங்கி காணப்பட்டது. இந்த நுரையானது, சுமார் 5 அடி உயரத்துக்கு பரவி ஓடையே தெரியாத அளவுக்கு நுரை ஆக்கிரமித்துள்ளது.
விண்ணில் இருந்து, வெண் மேகங்கள் தரை இறங்கி தள்ளாடுவதை இந்த நுரை நினைவுப்படுத்துவதை போல் இருந்தது. இந்த காட்சியை அப்பகுதி மக்கள், விவசாயிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
கழிவுநீர் காரணமா?
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பழனி நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சிறுநாயக்கன்குளத்தில் விடப்படுகிறது. மேலும் அந்த குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. குளத்தில் கழிவு தன்மை அதிகமாக இருப்பதால், அதில் இருந்து வெளியேறிய தண்ணீரில் நுரை அதிக அளவில் பொங்கியது.
இதனால் குளத்து நீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய அச்சமாக உள்ளது. மேலும் இந்த தண்ணீரை கால்நடைகள் அருந்தினால் அவற்றிற்கு நோய்கள் வருமோ? என்ற கேள்விக்குறியும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுநாயக்கன்குளத்தை தூர்வாருவதுடன், அதில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றனர்.
பழனியில் பரபரப்பு
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, குளத்தில் பழனி நகரின் கழிவுநீர் கலப்பதாலேயே நுரை பொங்கும் நிகழ்வு ஏற்பட்டது. எனவே நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்தபின் குளத்தில் விட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால் நுரை பொங்கிய சம்பவங்கள் சமீபத்தில் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே பழனி அருகே ஓடையில் அதுபோன்று நுரை பொங்கிய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.