வேலூரில் பெட்ரோல் விலை ரூ.106-ஐ நெருங்கியது

வேலூரில் பெட்ரோல் விலை ரூ.105.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Update: 2021-10-24 14:14 GMT
வேலூர்

வேலூரில் பெட்ரோல் விலை ரூ.105.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வரலாறு காணாத உயர்வு

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கியாஸ் சிலிண்டர் மாதத்துக்கு ஒருமுறையும், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றம் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. இது கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி 3 ரூபாய் குறைக்கப்படும் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது.

பெட்ரோல் விலை ரூ.106-ஐ நெருங்கியது

ஆனால் அதைத்தொடர்ந்து தினமும் சிறிதளவு அதிகரிக்கப்பட்ட விலையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் ரூ.100-ஐ கடந்தது. தற்போது பெட்ரோல், டீசல் இதுவரை இல்லாத அளவிற்கு விலை அதிகரித்துள்ளது. வேலூரில் பெட்ரோல் விலை ரூ.106-ஐ நெருங்கி உள்ளது. நேற்று முன்தினம் ரூ.105.50-க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்து ரூ.105.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் 33 காசுகள் அதிகரித்து ரூ.101.83-க்கு விற்பனையானது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டார் சைக்கிள், மினிவேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 
தினமும் பெட்ரோல், டீசல் விலை சுமார் 30 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்