அரசு பஸ்சை கைகளால் தூக்க முயன்ற போதை ஆசாமி
அரசு பஸ்சை கைகளால் தூக்க முயன்ற போதை ஆசாமி;
வேலூர்
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் மற்றும் பஸ்களின் வருகை காரணமாக பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மதுபோதையில் பாட்டுப்பாடி நடனமாடியபடி பஸ்நிலையத்தில் அங்குமிங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பயணிகள் அவரின் செய்கைகளை கண்டு சிரித்தனர். அதனால் ஆத்திரம் அடைந்த குடிமகன் திடீரென பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, அங்கு நின்ற அரசு பஸ்சை கைகளால் தூக்க முயன்றார்.
சிறிதுநேர போராட்டத்துக்கு பின்னர் பஸ்சை தூக்க முடியாததால் ஆத்திரம் அடைந்து டிரைவர் சீட்டின் அருகே இருக்கும் கதவை திறந்து வேகமாக மூடினார். பின்னர் வேறு இடத்துக்கு சென்று பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதனால் பஸ்நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.