மழையால் பாலம் சேதம்
கூடலூர் அருகே மழையால் பாலம் சேதம் அடைந்தது. மேலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டனர்
கூடலூர்
கூடலூர் அருகே மழையால் பாலம் சேதம் அடைந்தது. மேலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டனர்
திடீர் மழை
கூடலூரில் இருந்து தினமும் காலை 7.30 மணிக்கு குற்றிமுற்றி, புழம்பட்டி, மச்சிக்கொல்லி, ஒற்றவயல், பாலம்வயல், தேவர்சோலை வழியாக தேவன்-1, 2 பகுதிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் சுற்றுவட்டார கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணம் செய்து வந்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் திடீர் கனமழை பெய்தது.
இதனால் வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் விவசாய நிலங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. இது தவிர பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகளில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக ஒற்றவயல் தரைப்பாலம் மற்றும் சாலை பலத்த சேதமடைந்தது.
பஸ் போக்குவரத்து நிறுத்தம்
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் கூடலூரில் இருந்து பயணிகளுடன் குற்றிமுற்றி, புழம்பட்டி, மச்சிக்கொல்லி வரை பஸ் இயக்கப்பட்டது. ஆனால் ஒற்றவயல் தரைப்பாலம் மற்றும் சாலை சேதமடைந்து உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஸ் திருப்பி விடப்பட்டு, 4-ம் மைல் வழியாக தேவர்சோலைக்கு இயக்கப்பட்டது.
மேலும் பாலம்வயல், மச்சி கொல்லிமட்டம் உள்பட சில கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் தனியார் வாகனங்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது பள்ளி மாணவர்கள் நேரடி வகுப்புக்கு செல்வதால், பஸ் போக்குவரத்து இல்லாமல் அவதிப்படும் நிலை காணப்படுகிறது.
மழை அளவு
ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பரவலாக மழை பெய்தது. நகரில் மாலை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் கடும் குளிர் நிலவியது.
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- நடுவட்டம்-25, கெத்தை-15, கிண்ணக்கொரை-24, கூடலூர்-37, தேவாலா-13, செருமுள்ளி-58, பந்தலூர்-81, சேரங்கோடு-26 என மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பந்தலூரில் 8 சென்டி மீட்டர் மழை பதிவானது.