புழல் அருகே கட்டிடத்தொழிலாளி வெட்டிக்கொலை - கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

புழல் அருகே கட்டிடத்தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-24 08:40 GMT
செங்குன்றம்,

விழுப்புரம் மாவட்டம் வாணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 27). இவர், சென்னையை அடுத்த புழல் புத்தகரம் சிங்காரவேலன் நகரில் உள்ள தனது மாமா முருகவேல் என்பவரது வீட்டில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த வாரம் ஆறுமுகத்துக்கும், அவருடைய மாமா முருகவேலுக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், மாமா என்றும் பாராமல் முருகவேலை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து அவர், தன்னுடைய மகனான, பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வரும் அஜித்குமார்(21) என்பவரிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தனது தந்தையை தாக்கிய ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு அஜித்குமார், பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் தனது நண்பரான வில்லிவாக்கம் அகத்தியர் நகரைச் சேர்ந்த ராஜேஷ்குமார்(21), டிபி.சத்திரம் 29-வது குறுக்கு தெருவை சேர்ந்த தனது நண்பர் அசோக்(20) ஆகியோருடன் சேர்ந்து புத்தகரம் சுபாஷ் நகர் அருகே ஒரு குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புழல் போலீசார், கொலையான ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கல்லூரி மாணவர்களான அஜித்குமார், ராஜேஷ்குமார் மற்றும் அசோக் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்