இந்தியா-வங்காளதேசம் உறவு மற்ற நாடுகளுக்கு உதாரணம்; வெளியுறவுத்துறை செயலாளர் பேச்சு
இந்தியா-வங்காளதேச உறவு மற்ற நாடுகளுக்கு உதாரணம் என்று வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்தார்.
பெங்களூரு: இந்தியா-வங்காளதேச உறவு மற்ற நாடுகளுக்கு உதாரணம் என்று வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்தார்.
3 நாள் மாநாடு
பெங்களூருவில் உள்ள எலகங்கா விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையினரின் 3 நாட்கள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கிவைத்தார்.
2-வது நாள் மாநாடு நேற்று நடந்தது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்ளா கலந்துகொண்டு பேசியதாவது:-
மற்ற நாடுகளுக்கு உதாரணம்
கடந்த 1971-ம் ஆண்டில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்று வங்காளதேசம் என்ற நாடு உருவானது. அதற்கான 50-வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் இந்த தருணத்தில் இந்தியா-வங்காளதேசம் இடையேயான உறவின் ஆழம் பற்றி உலக நாடுகள் நன்றாக அறியும்.
பக்கத்து நாடுகளுடன் எவ்வாறு தேசிய அளவிலான உறவுகளை ஏற்படுத்திகொள்ள வேண்டும் என்பதில் வங்காளதேசத்துடனான நமது வர்த்தகம் மற்றும் தேசிய அளவிலான உறவு மற்ற நாடுகளுக்கு உதாரணமாக உள்ளது.
1971-ம் ஆண்டில் இந்தியா பெற்ற வெற்றி அரசியல் ரீதியானது மட்டுமல்லாமல், தார்மீக ரீதியான தர்ம யுத்தமாக அமைந்தது. அத்துடன், உலக அரங்கில் இந்தியாவின் புகழை எடுத்துக் காட்டியது. மனித உரிமைகளுக்கான மதிப்பை நிலைநாட்டும் வகையில் வங்காளதேசத்துக்கு இந்த வெற்றியை இந்தியா பரிசாக அளித்துள்ளது.
இந்தியாவின் பரிசு
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பயந்து அகதிகளாக வந்த வங்காளதேச மக்களை இந்தியா மனித தன்மையுடன் அரவணைத்துக்கொண்டது உலக நாடுகள் மத்தியில் மதிப்பளிக்கும் செயலாக அமைந்தது. அன்றைய சூழலில் இந்தியாவின் பொருளாதார நிலை சிறப்பாக இல்லாவிட்டாலும் சுமார் ஒரு கோடி வங்காளதேச அகதிகளை வரவேற்றோம்.
ஐ.நா. சபை, வங்காளதேசம் என்ற புதிய தேசம் உருவாவதில் வரையறுக்கப்பட்ட ஆதரவையே அளித்து வந்தது. ஆனால், இந்தியா தனது சகோதர நாடான வங்காளதேசத்துக்கு தனது ஆதரவை கடைசி வரை அளித்தது. அதன்பின்னர் உலகநாடுகள் இந்தியாவின் வழியை பின்பற்றி வங்காளதேசம் உருவாக ஆதரவு அளித்தன.
இவ்வாறு அவர் பேசினார்.