தேர்தல் வரும் போது தான் சிறுபான்மையினர் ஞாபகம் காங்கிரசுக்கு வருகிறது; பசவராஜ் பொம்மை பேச்சு
5 ஆண்டுகளாக கிணற்றுக்குள் போட்டு இருந்ததாகவும், தேர்தல் வரும் போது தான் சிறுபான்மையினர் ஞாபகம் காங்கிரசுக்கு வருவதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
ஹாவேரி: 5 ஆண்டுகளாக கிணற்றுக்குள் போட்டு இருந்ததாகவும், தேர்தல் வரும் போது தான் சிறுபான்மையினர் ஞாபகம் காங்கிரசுக்கு வருவதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
ஹாவேரி மாவட்டம் ஹனகல் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
தேர்தல் வந்ததால் மட்டுமே...
காங்கிரஸ் கட்சி மூழ்கி கொண்டு இருக்கும் கப்பல் இல்லை. அந்த கப்பல் ஏற்கனவே மூழ்கி விட்டது. காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தல் வந்து விட்டால் சிறுபான்மையினர் ஞாபகம் வந்துவிடும். தேர்தலுக்கு முன்பு வரை 5 ஆண்டுகளாக சிறுபான்மையினரை கிணற்றுக்குள் போட்டு இருந்தனர். தற்போது இடைத்தேர்தல் நடப்பதால் சிறுபான்மையினரை கிணற்றுக்குள் இருந்து கயிறு கட்டி காங்கிரசார் மேலே தூக்குகின்றனர்.
இடைத்தேர்தலில் சிறுபான்மையினர் ஓட்டு காங்கிரசுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே பயன்படுத்தி கொள்கின்றனர். சிறுபான்மையினர் இருப்பதால் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அவர்கள் இல்லையெனில் நாட்டில் காங்கிரசை தேட வேண்டிய நிலை வந்து விடும்.
சிறுபான்மையினருக்கு எதிராக பா.ஜனதா இல்லை. ஹனகல் தொகுதியில் மட்டும் சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரிய தலைவர் ஆக முடியாது
எதிர்க்கட்சிகள் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளையும், நான் படிக்கட்டுகளாக தான் பார்க்கிறேன். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை, படிக்கட்டுகளாக மாற்றி, ஒவ்வொரு படியாக ஏறி, மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்வேன். யார் என்ன சொன்னாலும், விவசாயிகளின் நலன் மட்டுமே எனது குறிக்கோள் ஆகும்.
கர்நாடகத்தில் சமமான வளா்ச்சிக்காக எப்போதும் பாடுபடுவேன். விவசாயிகளுக்காக வேறு எந்த மாநிலமும் கொண்டு வராத நீர்ப்பாசன திட்டங்களை பா.ஜனதா அரசு கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.
கொரோனா சந்தர்ப்பத்தில் மாநில மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வடகர்நாடக மாவட்ட மக்கள் அன்பு மிக்கவர்கள்.
அவர்களுக்கு உதவி செய்ததை மறக்க மாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேசினால், அரசியலில் பெரிய தலைவர் ஆகிவிடலாம் என்று சித்தராமையா நினைக்கிறார். பிரதமரை தவறாக பேசி அவரால் பெரிய தலைவர் ஆக முடியாது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.