தேர்தல் அலுவலரிடம் தகராறு: வார்டு உறுப்பினர் மீது வழக்கு
தேர்தல் அலுவலரிடம் தகராறு செய்த வார்டு உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் கீழ வெள்ளகால் பஞ்சாயத்து துணை தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது போதிய வார்டு உறுப்பினர்கள் வராததால், தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தாமஸ் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 2-வது வார்டு உறுப்பினர் சாமி, நாற்காலிகளை உடைத்து தாமசை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், சாமி மீது சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.