நெல்லையில் 785 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

நெல்லை மாவட்டத்தில் 785 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

Update: 2021-10-23 21:26 GMT
நெல்லை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், பொதுமக்களுக்கு தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவேக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை 2 தவணைகளாக செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைதோறும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது. இதில் லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. எனினும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்தி கொள்வதை அசைவ பிரியர்கள், மதுபிரியர்கள் தவிர்த்து வந்தனர். இதையடுத்து சனிக்கிழமைதோறும் தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் 6-வது சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 726 முகாம்கள், 59 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 785 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
நெல்லை மாநகரில் மட்டும் 175 முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம்களில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானவர்கள் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகளை ஆர்வமுடன் போட்டுக் கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை முதல் தவணை கொரோனா தடுப்பூசியை சராசரியாக 60.03 சதவீதம் பேர் போட்டுக் கொண்டுள்ளனர். இதில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், போலீசாருக்கு 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்களில் 67 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இதேபோன்று 2-வது தவணை தடுப்பூசியை மாவட்டம் முழுவதும் சராசரியாக 18.73 சதவீதம் பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இதில் சுகாதார பணியாளர்களில் 66 சதவீதம் பேரும், முன்கள பணியாளர்களில் 78 சதவீதம் பேரும், போலீசாரில் 64 சதவீதம் பேரும், பொதுமக்களில் 24 சதவீதம் பேரும் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்