திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அர்ச்சனை -அபிஷேகத்திற்கு பக்தர்கள் அனுமதி

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேங்காய், பழம் மற்றும் பூமாலை கொண்டு சென்று அர்ச்சனை செய்வதற்கும், அபிஷேகம் நடக்கும் போது பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Update: 2021-10-23 21:10 GMT
திருப்பரங்குன்றம்,

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேங்காய், பழம் மற்றும் பூமாலை கொண்டு சென்று அர்ச்சனை செய்வதற்கும், அபிஷேகம் நடக்கும் போது பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

தட்டை திரும்பி அனுப்பினர்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனைத்து நாட்களும் திறக்கப்பட்ட நிலையில் அர்ச்சனை செய்வதற்காக தேங்காய், பழம் மற்றும் பூமாலை கொண்டு செல்ல அனுமதிக்கப்படாத நிலை ஏற்பட்டது.மேலும் பக்தர்கள் கொண்டு சென்ற தேங்காய் பழத்தட்டை திரும்ப கொடுத்து அனுப்பி வைத்தனர். இதனால் பக்தர்கள் மனவேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் கோவிலுக்கு வந்து செல்லக்கூடிய பக்தர்களை மட்டுமே நம்பி கோவில் வாசலில் தேங்காய், பழம் மற்றும் பூமாலை விற்றுப் பிழைப்பு நடத்தி வந்த 100-க்கும் மேற்பட்ட சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வியாபாரிகளின் வாழ்வாதாரமும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக கேள்விக்குறியானது.

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் படத்துடன் தினத்தந்தி நாளிதழில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக கோவில் ஊழியர்கள் கடை, கடையாக சென்று தேங்காய், பழம் மற்றும் பூக்கள், மாலைகள் தாராளமாக விற்பனை செய்யலாம். கோவிலுக்குள் பக்தர்களுக்கு அர்ச்சனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறினர். இதனையடுத்து வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து தினத்தந்தி நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் கோவிலுக்குள் பத்தர்கள் அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு கோவிலுக்கு அர்ச்சனை மூலம் வருமானம் வரத்தொடங்கியது. அபிஷேகத்தின் போதும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஐப்பசி கார்த்திகையையொட்டி சுப்பிரமணியசாமி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நடை திறப்பு நேரம்

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று முதல் வழக்கமாக காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.இத்தகைய நடைமுறை கடந்த 8 மாதத்திற்கு பிறகு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. முன்பு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இரவு 8 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. இப்போது பழைய முறைப்படி இரவு 9 மணி வரை நடை திறந்து இருக்கும். திருவிழாக்களின் போது சாமி புறப்பாடுகள் கோவிலுக்குள்ளேயே நடத்தப்படுகின்றன.

மேலும் செய்திகள்