கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பளுகல் அருகே புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய வாலிபரால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களியக்காவிளை,
பளுகல் அருகே புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய வாலிபரால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவி தற்கொலை
குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளையை சேர்ந்தவர் பீனா. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது ஒரே மகள் ஆதிரா (வயது 19). களியக்காவிளையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் ஆதிரா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த உறவினர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது ஆதிரா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் பளுகல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டல்
தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஆதிரா கடந்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு வாலிபர் மீது புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒரு வாலிபர் வாட்ஸ்-அப் மூலம் என்னுடன் பழகி வந்தார். பின்னர் அவருடைய செயலில் மாற்றம் ஏற்பட்டது. எனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார். மேலும், அந்த புகைப்படத்தை எனது தாயாருக்கும் அனுப்பியுள்ளார். அதன்பிறகு அவருடைய தொந்தரவு நின்றபாடில்லை. பின்னர் செல்போன் மூலம் மிரட்டி வந்தார். இதற்கு வாலிபரின் உறவினர்களும் ஆதரவாக இருந்தனர். இந்தநிலையில் பணம் கொடுக்காததால் சித்தரிக்கப்பட்ட எனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர்.
பின்னர் திருச்சூர் வாலிபரின் நண்பர் ஒருவரும் என்னை தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது.
புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வாலிபர் தொடர்ந்து மிரட்டி வந்ததால் மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
செல்போன் அழைப்புகள் ஆய்வு
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், மாணவி தற்கொலைக்கான முழு காரணம் இன்னும் தெரியவில்லை. அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப்பில் வந்த தகவல்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது தாயாரும் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். தாயார் வந்த பின்பு அவரிடமும் விசாரணை நடத்தப்படும். மேலும் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
வாலிபரின் மிரட்டலால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.