தாளவாடி தலமலை-பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு; கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
தாளவாடி தலமலை மற்றும் பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.;
தாளவாடி
தாளவாடி தலமலை மற்றும் பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மண் சரிவு
ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு தொடர்ந்து நல்ல மழை பெய்துவருகிறது. வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் வனக்குட்டைகள் நிரம்பி வழிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தலமலை வனப்பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இந்த மழை காரணமாக தலமலை வனச்சாலையில் ராமரணை, காளிதிம்பம் ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு ரோட்டில் சாய்ந்தன. இதனால் ராமரணை, காளிதிம்பம், இட்டரை, தடசலட்டி, மாவநத்தம், பெஜலட்டி போன்ற மலைக்கிராமங்களுக்கு எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அப்புறப்படுத்தும் பணி
வழக்கமாக ராமரணை, காளிதிம்பம், இட்டரை, தடசலட்டி, மாவநத்தம், பெஜலட்டி மலை கிராமங்களுக்கு 2 அரசு பஸ்கள் மட்டுமே சென்று வரும். மண் சரிவு காரணமாக இந்த 2 பஸ்களும் செல்ல முடியவில்லை.
மாணவ-மாணவிகளை பெற்றோர் மண் சரிந்த பாதையில் சிரமப்பட்டு இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றார்கள்.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 12 மணியளவில் வனத்துறையினர் அங்கு வந்து மரங்களையும், சரிந்து கிடந்த மண் குவியலையும் அப்புறப்படுத்தினார்கள். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.
கர்நாடகாவுக்கு செல்லும் மழைநீர்
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் வனச்சாலையில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இந்தநிலையில் தாளவாடி மலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால், தாளவாடி ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை நீர் அப்படியே கர்நாடக மாநிலம் சிக்கொலா அணைக்கு செல்கிறது. இந்த பகுதியில் ஒரு தடுப்பணை கட்டினால் மழைநீர் நமக்கு பயன்படும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மீண்டும் மண்சரிவு
இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையால் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. பெரிய பெரிய மரங்கள் வேரோடு ரோட்டில் சாய்ந்தன. மண் குவியல்கள் ரோட்டை ஆக்கிரமித்து கிடந்தன.
இதனால் மைசூருவில் இருந்து பர்கூர் வழியாக அந்தியூர் மற்றும் ஈரோடு வந்த வாகனங்கள் மலைப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
இதேபோல் அந்தியூரில் இருந்து மைசூருக்கு சென்ற வாகனங்கள் வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன.
போக்குவரத்து
மண் சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஊழியர்களுடன் சென்று அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். பொக்லைன் எந்திரம் மூலம் ரோட்டில் கிடந்த ராட்சத பாறைகள் அகற்றப்பட்டன. முறிந்து விழுந்த மரங்களை பணியாளர்கள் அறுத்து வெட்டி ரோட்டு ஓரத்துக்கு கொண்டு சென்றார்கள்.
நேற்று காலையில் இருந்து சுமார் 12 மணி நேரத்துக்கு பிறகே பர்கூர் மலைப்பாதையில் போக்குவரத்து ெதாடங்கியது.