தினத்தந்தி புகார் பெட்டி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2021-10-23 20:51 GMT
குளக்கரை சுத்தப்படுத்தப்படுமா?
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சிவன் கோவில் குளத்தின் கரையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் அருகில் உள்ள கடைகளில் புகுந்து விடுகின்றன. மேலும் நடைபாதையில் பள்ளங்கள் ஏற்பட்டு தடை பாதையாகவே உள்ளது. மக்கள் நடை பயிற்சி செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தின் கரைகளை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-பொதுமக்கள், மெலட்டூர்.
குப்பை தொட்டி வேண்டும்
தஞ்சை மாநகராட்சி பாலோபநந்தவனம் பகுதியில் நீண்ட காலமாக சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் மழை தண்ணீர் சாலையில் தேங்கிவிடுகிறது. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் குப்பை தொட்டியும் இதுவரை இல்லாமல் சாலையில் குப்பைகள் கொட்டப்படும் அவலநிலை உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலையை சீரமைத்தும், குப்பை தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், பாலோபநந்தவனம்.
தெருவிளக்கு எரியுமா?
தஞ்சாவூர் மாவட்டம் வேங்குராயன்குடிக்காடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மழை காலமாக இருப்பதால் விஷ பூச்சிகள்  அருகில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர், செயலாளருக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-கலைச்செல்வன், வேங்குராயன்குடிக்காடு.
பயணிகள் நிழற்குடை வேண்டும்
ஒரத்தநாடு தாலுகா அக்கரைவட்டம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தரப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் சாலையில் நின்றபடியே பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் மழையில் நனைந்தபடி நிற்கின்றனர். மேலும் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், அக்கரைவட்டம்.

மேலும் செய்திகள்